மும்பையில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக பாஜகவினர் நடத்திய பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் கண்டு ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர், மாநில அமைச்சர் கிரீஷ் மகாஜனை நடுரோட்டில் வைத்து சரமாரியாகக் கேள்வி எழுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது. ஒர்லி பகுதியில் நடந்த இந்தப் பேரணியால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்தம்பித்தன. அப்போது தனது மகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வர இருசக்கர வாகனத்தில் சென்ற அந்தப் பெண், அமைச்சரிடம் நேரடியாகச் சென்று, “ஏன் இவ்வளவு பிஸியான சாலையில் பேரணி நடத்துகிறீர்கள்? காலி மைதானத்திற்குச் சென்று உங்கள் கருத்தைச் சொல்லுங்கள், போக்குவரத்துக்கு இடையூறு செய்யாதீர்கள்” என்று துணிச்சலாக வாதிட்டார்.
திடீரென ஒரு பெண் அமைச்சரிடம் வாக்குவாதம் செய்ததால் அங்கிருந்த பாஜகவினர் மற்றும் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைச்சர் திணறிய நிலையில், போலீஸார் அந்தப் பெண்ணை அங்கிருந்து தனியாக அழைத்துச் சென்று சமாதானப்படுத்தினர். பொதுமக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்திய இந்தப் பேரணிக்கு எதிராகக் குரல் கொடுத்த அந்தப் பெண்ணின் தைரியத்தை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் மும்பை ஒர்லி பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
