திருப்பத்தூர் மாவட்டம் தில்லை நகரைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் கணவனைப் பிரிந்த மற்றும் கணவனை இழந்த பெண்களைக் குறிவைத்து, திருமண ஆசை காட்டி ஏமாற்றிப் பணத்தைச் சுருட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு துணிக்கடையில் வேலை பார்த்தபோது, கணவனை இழந்த பெண் ஒருவருடன் பழகி, அப்பெண்ணின் பணத்தில் கார் வாங்கி வலம் வந்துள்ளார். பின்னர் அப்பெண்ணிடம் இருந்த பணம் தீர்ந்ததும் காரை அடமானம் வைத்துவிட்டுத் தப்பியோடி விட்டார். இதனால் மன உடைந்த அப்பெண் தற்கொலைக்கு முயன்ற நிலையில், புகாரின் பேரில் போலீசார் கமலக்கண்ணனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் திருந்தாத கமலக்கண்ணன், தனது நண்பரின் குடும்பப் பிரச்சினையைப் பயன்படுத்தி அவரது மனைவியான வைஷாலியிடம் ஆறுதல் கூறுவது போல் நடித்து நெருக்கமாகியுள்ளார். வைஷாலியின் தாயாரின் நகைகளைத் திருடியதுடன், வீட்டை விற்று வைக்கப்பட்டிருந்த தொகை மற்றும் சிங்கப்பூர் அழைத்துச் செல்வதாகக் கூறி நகை, பணம் எனப் பல லட்ச ரூபாயை மோசடி செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வைஷாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில், கமலக்கண்ணனை மீண்டும் கைது செய்த தாலுகா போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
