உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் நெஞ்சை உருக்கியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி பகுதியைச் சேர்ந்த சுராஜ் திவாரி என்பவர், ஆசிரியர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லக்னோவிற்கு வந்துள்ளார். அங்குள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியர் பணியைத் தேடிய அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் பெரும்பாலும் பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுவதால், ஆண் என்ப காரணத்தினாலேயே தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/reel/DfTryw4PLaJ/?utm_source=ig_web_copy_link&cplk=NTc4MTIwNjQ2YQ==
குடும்பச் சூழல் மற்றும் பிழைப்புக்காக லக்னோவில் ராபிடோ ஆட்டோ ஓட்டிவரும் அவர், கிடைக்கும் இடைவெளியில் ‘சூப்பர் டெட்’ தேர்வுக்காகத் தீவிரமாகப் படித்து வருகிறார். மல்லிகா அகர்வால் என்ற பெண் பயணியின் ஆட்டோவில் பயணம் செய்தபோது சுராஜின் இந்தக் சோகக் கதை வெளியுலகத்திற்குத் தெரியவந்துள்ளது. அந்தப் பயணி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், லட்சியத்தைக் கைவிடாமல் போராடும் சுராஜுக்குப் பலரும் தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
