தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள அங்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண், கணவரைப் பிரிந்து தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து குடும்பத்தைக் கவனித்து வரும் நிலையில், கீழக்கல்லாம்பாறையைச் சேர்ந்த வைகுண்டம் (28) என்பவர் கடந்த 8 மாதங்களாக அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தித் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இரவு நேர வேலையை முடித்துவிட்டு அப்பெண் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த வைகுண்டம் திடீரெனக் கையைப் பிடித்து இழுத்துப் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் குரும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள வைகுண்டத்தைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
