ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மதுரவாடா கிரிக்கெட் மைதானம் அருகே சனிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட கொடூர சாலை விபத்தில், 30 வயது ஐடி நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரவாடா சந்திரம்பாலம் துர்க்கா நகரைச் சேர்ந்த கே.அவிநாஷ் (30) என்பவர் IT SEZ ஹில் எண்-2 இல் உள்ள பிரபல நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். சனிக்கிழமை நள்ளிரவு பணியை முடித்துவிட்டுத் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மதுரவாடா கிரிக்கெட் மைதானம் எதிரே உள்ள சிக்னலில் சாலையைக் கடப்பதற்காகத் தனது வாகனத்தின் வேகத்தைக் குறைத்துள்ளார்.
அப்போது அவருக்குப் பின்னால் அதிவேகமாகவும் அலட்சியமாகவும் வந்த சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கனரக லாரி, அவிநாஷின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் லாரியின் அடியில் சிக்கிய அவிநாஷ் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓட முயன்ற லாரி ஓட்டுநரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
