சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதல் கணவரைப் பிரிந்த முத்துமாரியம்மாள் (38) என்பவரைக் காதலித்து இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். முத்துமாரியம்மாளுக்கு முதல் கணவர் மூலம் 3 குழந்தைகள் உள்ள நிலையில், அவர்கள் தந்தையுடன் வசித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாகச் சரண்ராஜ் வேலைக்குச் செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி வீட்டிலேயே இருந்து வந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவும் குடிபோதையில் வந்த சரண்ராஜ் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆத்திரத்தில் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் முத்துமாரியம்மாளின் மார்பில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே முத்துமாரியம்மாள் உயிரிழந்தார். உடனே 108 ஆம்புலன்ஸிற்கு அழைப்பு விடுத்த சரண்ராஜ், மனைவி கீழே விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். எனினும், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சந்தேகமடைந்து கொளத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முத்துமாரியம்மாளின் உடலைக் கைப்பற்றிக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலையாளி சரண்ராஜை அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
