தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே ஜக்கசமுத்திரம் கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்த சித்தேஸ்வரன் (27) என்பவரின் மனைவி மகேஸ்வரிக்கும், அவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த நண்பர் சூர்யா (25) என்பவருக்கும் பள்ளிப் பருவத்திலிருந்தே காதல் இருந்து வந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகும் இருவரும் செல்போனில் பேசி வந்ததை சித்தேஸ்வரனின் மற்றொரு நண்பரான குணசேகரன் (25) ஆடியோ ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் சூர்யாவுக்கு நண்பர்கள் மீது ஆத்திரம் இருந்துள்ளது.
இந்நிலையில் சி.எம்.புதூர் பகுதியில் சித்தேஸ்வரன், சூர்யா, குணசேகரன் மற்றும் திருமூர்த்தி ஆகியோர் ஒன்றாக மது அருந்தியபோது, திட்டமிட்டு கத்தியை மறைத்து வந்திருந்த சூர்யா சித்தேஸ்வரனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சூர்யா கத்தியை எடுத்துச் சித்தேஸ்வரனைக் குத்த முயன்றபோது, இடையே புகுந்து தடுக்க முயன்ற நண்பர் குணசேகரனுக்குக் கத்திக்குத்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு நண்பர் திருமூர்த்தி காயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக மாரண்டஅள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், கொலையாளி சூர்யா பாலக்கோடு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
