“எனக்கு சோறு போடாத நீ உயிரோடு இருக்காத”…. ரத்த வெள்ளத்தில் மிதந்த தாய்… திருவண்ணாமலையில் நள்ளிரவில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

By Nanthini on ஆனி 13, 2026

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள எழுவம்பாடி கிராமத்தில், சாப்பாடு போட மறுத்த காரணத்திற்காக 52 வயது மதிக்கத்தக்க யசோதா என்ற பெண்மணி கத்தியால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்து தனியாக வசித்து வந்த யசோதா, கல் உடைக்கும் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியில் கல் உடைக்கும் தொழில் செய்து வந்த வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்ற இளைஞரை, யசோதா தனது சொந்த மகன் போல பாவித்து அவருக்கு தினமும் உணவு வழங்கி பராமரித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

   

தாயின் இந்த செயல் அவரது உண்மையான மகன் சேட்டுவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “அந்நிய நபர் ஒருவருக்கு எதற்காக தொடர்ந்து உணவு வழங்க வேண்டும்?” என்று கோபமடைந்த சேட்டு, இனிமேல் மூர்த்திக்கு சாப்பாடு கொடுக்கக் கூடாது என்று தனது தாயைக் கண்டித்துள்ளார். மகனின் சொல்லுக்குக் கட்டுப்பட்ட யசோதாவும் கடந்த சில நாட்களாக மூர்த்திக்கு உணவு வழங்குவதை நிறுத்தியுள்ளார். இதனால் பசியினாலும், தனக்குக் கிடைத்து வந்த ஆதரவு நின்றதாலும் மூர்த்தி பெரும் மனவேதனை அடைந்ததாகத் தெரிகிறது.

   

இந்த மனக்கசப்பு இன்று அதிகாலை ஒரு கொடூரமான கொலையில் முடிந்தது. கடுமையான மதுபோதையில் இருந்த மூர்த்தி, யசோதாவின் வீட்டிற்குச் சென்று “எனக்கு ஏன் உணவு தர மறுக்கிறாய்?” என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே, ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற மூர்த்தி, “எனக்கு சோறு போடாத நீ உயிரோடு இருக்கக் கூடாது, சாவு!” என்று கத்திக்கொண்டே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யசோதாவின் கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த யசோதா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போளூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், யசோதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய கொலையாளி மூர்த்தியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வெறும் உணவுக்காகத்தான் இந்த கொலை நடந்ததா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.