கர்நாடக மாநிலம் பெங்களூரு கிராமப்புற மாவட்டம் தேவனஹள்ளி தாலுகாவிற்குட்பட்ட சீமாச்சனஹள்ளி கிராமம் அருகே, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் பலமாக மோதிக்கொண்ட கொடூர விபத்தில், 25 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சிட்லகட்டா தாலுகா அப்பேகவுடனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த அமர் (25) என்பவர் வெள்ளிக்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னராயபட்டணா – பாலேபுரா சாலையில் எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், அமரின் பைக் மீது நேருக்கு நேர் பலமாக மோதியது. இந்த பயங்கர மோதலில் அமர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொரு பைக்கை ஓட்டி வந்த நபருக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோதிய வேகத்தில் இரண்டு பைக்குகளும் முற்றிலும் நொறுங்கிச் சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து சென்னராயபட்டணா காவல் நிலையப் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
