நண்பர்களை நம்பிப் போனார்… இடுகாட்டில் ரத்த வெள்ளம்… 17 வயது கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… பின்னணி என்ன?…!!

By Gayathri on ஆவணி 14, 2026

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சாணாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர் ரஞ்சன் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் பயின்று வந்த இவருடைய சடலம், அவரது வீட்டின் அருகாமையில் உள்ள இடுகாட்டில் ஒரு கல்லறையின் மீது தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரமான சம்பவம் அந்த சுற்றுவட்டார மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ராஜா – மஞ்சு தம்பதியரின் மூத்த மகனான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு திருட்டு வழக்கில் சிக்கி அதற்காக தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக இவருக்கும் வேறு சில நபர்களுக்கும் இடையே அடிக்கடி தொலைபேசியில் வாக்குவாதங்களும் மோதல்களும் நடைபெற்று வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், நேற்று இரவு சில நண்பர்கள் அவரை வீட்டை விட்டு வெளியில் அழைத்துச் சென்றதாகவும், அதன் பிறகே அவர் மாயமானதாகவும் ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து தகவலறிந்த பாதிரிவேடு காவல் துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாகவே திட்டமிட்டு இந்த படுகொலை அரங்கேறியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள கொலையாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர்.