சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள மயானப் பகுதியில் ஷாகுல் அமீது என்ற இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இன்று காலை அப்பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலைப் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து தங்களது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.
கொலை செய்யப்பட்ட ஷாகுல் அமீது மீது ஏற்கனவே 2020-ல் ஒரு கொலை வழக்கும், சமீபத்தில் கஞ்சா விற்பனை செய்த வழக்கும் நிலுவையில் உள்ளன. சிறையில் இருந்த இவர் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதிதான் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நேற்று மாலை இதே மயானப் பகுதியில் தனது நண்பர்களுடன் அவர் மது அருந்தியதை பார்த்ததாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ள நிலையில், அவருடன் இருந்தவர்களோ அல்லது வேறு மர்ம நபர்களோ இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கேளம்பாக்கம் பகுதியில் தங்களை பெரிய ஆளாக காட்டிக்கொள்ள இரு தரப்பினரிடையே இன்ஸ்டாகிராமில் நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, எதிர் தரப்பைச் சேர்ந்த சிலர் ஷாகுல் அமீதின் பிறந்தநாளான ஆகஸ்ட் 26-ம் தேதியே அவரை கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும், அவர் சிறையில் இருந்ததால் ஜாமீனில் வெளியே வந்த பிறகு திட்டம் தீட்டி கொன்றிருக்கலாம் எனவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளைக் கொண்டு தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
