தெலுங்கானா மாநிலம் சங்கர்பள்ளி மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, இளைஞர் ஒருவர் எதிர்பாராதவிதமாக மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பதேபூர் மூசி மேம்பாலம் அருகே விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் மிகவும் விமரிசையாக நடைபெற்று வந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற வாலிபர் ஒருவர் திடீரென பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிருக்குப் போராடியுள்ளார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து தவறி விழுந்ததால் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
