மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள புகழ்பெற்ற ராஜ்காட் கோட்டைக்கு தனது மூன்று நண்பர்களுடன் சுற்றுலா சென்ற சத்ரபதி சம்பாஜிநகரைச் சேர்ந்த ஜிக்னேஷ் சதாசிவ கந்தல்கர் (35) என்பவர், கோட்டையின் பாலி தர்வாஜா பகுதிக்கு அருகில் திடீரெனத் தலைசுற்றி மயங்கி விழுந்து உயிரிழந்தார். கடுமையான வெப்பம் மற்றும் சோர்வு காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உடன் வந்த நண்பர்கள் அவருக்கு உடனடியாக முதலுதவியாக சிபிஆர் அளித்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. பின்னர் மீட்புப் படையினர் உதவியுடன் ஸ்டெச்சரில் மலை அடிவாரத்திற்குக் கொண்டு வரப்பட்டு வெல்ஹே கிராமப்புற மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடுமையான வெயிலில் மலை ஏறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
