சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு குடும்பத்தின் மூத்த மகனை (Eldest Son) காதலிப்பதோ அல்லது டேட்டிங் செய்வதோ அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல என்றும், அதற்கு முன் நூறு முறை யோசிக்க வேண்டும் என்றும் அந்தப் பெண் நகைச்சுவையாகவும் அதே சமயம் எதார்த்தமாகவும் பேசியுள்ளார்.
வீடியோவில் பேசும் அந்தப் பெண், தனது காதலன் அவனது குடும்பத்தின் மூத்த மகன் என்பதால், தங்களால் திட்டமிட்டபடி ஒன்றாக நேரத்தை செலவிட முடிவதில்லை என்று வருத்தப்படுகிறார். குடும்பத்தின் மூத்த மகன்களுக்கு நாட்டின் பிரதமரை விட அதிக பொறுப்புகள் இருக்கும் என்று கிண்டலாகக் கூறும் அவர், வீட்டின் வேலைகள், தம்பி-தங்கைகளின் தேவைகள் மற்றும் பெற்றோரின் பொறுப்புகள் என அனைத்தையும் அவர்களே சுமப்பதால், உறவுகளுக்காக ஒதுக்க அவரிடம் நேரம் இருப்பதில்லை என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் மத்தியில் கலவையான கருத்துக்கள் குவிந்து வருகின்றன. பல இளைஞர்கள் அந்தப் பெண்ணின் கருத்தை வழிமொழிந்து, மூத்த மகன்களின் மீதான குடும்ப மற்றும் பொருளாதார ரீதியான அழுத்தங்கள் உண்மைதான் என்று பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில், சிலர் இதற்கு மாற்று கருத்துக்களையும் தெரிவித்து வருவதால், இந்த வீடியோ இணையத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
