ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ. 300 சிறப்பு தரிசனம் மற்றும் விஐபி தரிசனம் உள்ளிட்ட பல்வேறு முறைகள் அமலில் உள்ளன.
இந்நிலையில், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காகத் திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மூத்த குடிமக்கள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த சிறப்பு முறையில் சென்று ஏழுமலையானை வழிபடலாம்.
இச்சேவையைப் பெற விரும்புபவர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் வயதுச் சான்றை ‘எஸ்1’ கவுன்ட்டரில் காண்பித்து, கோயிலின் வலதுபுற சுவரையொட்டி அமைந்துள்ள மண்டபம் வழியாகச் செல்லலாம். இந்தச் பாதையில் படிக்கட்டுகள் இல்லாததால் முதியோர்கள் எளிதாக நடந்து சென்று, சுமார் 30 நிமிடங்களிலேயே தரிசனத்தை நிறைவு செய்ய முடியும். தரிசனத்திற்குப் பிறகு அவர்களுக்குச் சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பால் ஆகியவை வழங்கி உபசரிக்கப்படுகிறது.
