“நீ சாகப் போற.. ஜோதிடர் சொன்ன வார்த்தை… வீட்டில் 9 நாள் பூஜை”… நள்ளிரவு தூங்கச் சென்ற இளம்பெண்… விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…!

By S.RISHVANA on பங்குனி 1, 2026

Spread the love

ஜோதிடரின் கணிப்பால் மனமுடைந்த பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் பாகலகுண்டே பகுதியில் உள்ள எம்.இ.ஐ லே-அவுட்டில் வசித்து வந்த 29 வயதான வித்யா ஜோதி என்ற பெண், தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் இவருக்கும், குடகு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் இந்த விபரீத முடிவு அரங்கேறியுள்ளது.

திருமணத்திற்கு முன்னதாக ஜாதகப் பொருத்தம் பார்க்கச் சென்றபோது, ஒரு ஜோதிடர் வித்யா ஜோதிக்கு ஆயுட்காலம் மிகவும் குறைவு என்று கணித்துள்ளார். இதனால் பேரதிர்ச்சி அடைந்த வித்யா ஜோதி, தான் விரைவில் இறந்துவிடுவோம் என்ற அச்சத்தில் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அந்த ஜோதிடர் கூறிய பரிகாரத்திற்காக, அவரது குடும்பத்தினர் ஒன்பது நாட்கள் தொடர் பூஜைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இருப்பினும், அந்தப் பெண் தனது ஆயுள் குறித்த எதிர்மறையான கணிப்பைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு, தற்கொலை எண்ணத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

   

பூஜையின் இறுதி நாளான ஒன்பதாம் நாளில், மாரம்மாதேவிக்கு தாலியை காணிக்கையாகச் செலுத்த அந்த ஜோதிடர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி வித்யா ஜோதியும் பூஜையில் கலந்துகொண்டு தாலியை காணிக்கையாக வழங்கினார். பூஜைகள் அனைத்தும் முடிந்து இரவு உறங்கச் சென்ற அவர், மறுநாள் காலையில் வெகுநேரமாகியும் அறைக்கதவைத் திறக்கவில்லை. சந்தேகமடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, வித்யா ஜோதி தூக்கில் பிணமாகத் தொங்கியது கண்டு கதறித் துடித்தனர்.

   

தகவலறிந்து வந்த பாகலகுண்டே போலீசார் வித்யா ஜோதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோதிடர் சொன்ன எதிர்மறையான வார்த்தைகளைத் தாங்க முடியாமல் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு படித்த மென்பொருள் பொறியாளர் இதுபோன்ற மூடநம்பிக்கையால் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.