சென்னை ஜிஎஸ்டி சாலையையும் வேளச்சேரி, துரைப்பாக்கம் போன்ற ஐடி காரிடார் பகுதிகளையும் இணைக்கும் குரோம்பேட்டை ரேடியல் சாலை மேம்பாலம், நகரின் மிக முக்கிய போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகும். பல்லாவரம், கீழ்க்கட்டளை ஏரிகளைத் தாண்டிச் செல்லும் இந்த 200 அடி சாலையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. மேம்பாலத்திலேயே சிக்னல் அமைக்க வேண்டிய அளவுக்கு அதிக நெரிசல் மிகுந்த மற்றும் குறுகலான இந்தப் பகுதியில், வாகனங்கள் அடிக்கடி நெரிசலில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா கீழ் உத்தரங்குடியைச் சேர்ந்த யமுனா (23) என்பவர் குரோம்பேட்டையில் தங்கி சென்னையில் பணியாற்றி வந்தார். அவருடன் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜா (22) என்பவரும் ஒரே அறையில் தங்கி வேலை பார்த்து வந்தார். தோழிகள் இருவரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் குரோம்பேட்டை ரேடியல் சாலை மேம்பாலம் அருகே வந்து, அங்குள்ள சர்வீஸ் சாலையில் செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது, தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி நோக்கிச் சென்ற பார்சல் லாரி ஒன்று, ரேடியல் சாலைக்குச் செல்வதற்காக மேம்பாலத்தில் ஏற முயன்றது. எதிர்பாராதவிதமாக, கண் இமைக்கும் நேரத்தில் அந்த லாரி தோழிகள் இருவர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் லாரியின் அடியில் சிக்கி, சிறிது தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது.
இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த யமுனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக அவரது தோழி ஸ்ரீஜா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், யமுனாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
