பாஜகவில் இருந்து விலகிவிட்டதாகப் பரவலாகப் பேசப்பட்டு வந்த அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகிய இரு முக்கிய தலைவர்களும், தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் புள்ளி, கமா மாறாமல் ஒரே மாதிரியான பதிவை வெளியிட்டுள்ளது தற்பொழுது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து சில குறிப்பிட்ட செய்தி தொலைக்காட்சிகள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தவெக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த இரு பதிவுகளும் அமைந்துள்ளன. மின்வெட்டு மற்றும் தவெக அரசின் நிர்வாக திறனின்மை குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்ததால், பழிவாங்கும் நோக்கில் இந்த ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இருவருமே தங்களது பதிவுகளில் துல்லியமாக ஒரே வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதியுள்ளனர்.
இரு மூத்த தலைவர்களின் பக்கங்களிலும் ஒரே மாதிரியான விமர்சனம் வெளியானதை அடுத்து, பாஜகவின் ஐடி விங் தயார் செய்து கொடுத்த அறிக்கையை இரு தலைவர்களும் அப்படியே ‘காப்பி பேஸ்ட்’ செய்ததே இதற்குக் காரணம் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாகக் கலாய்த்து வருகின்றனர். அதே வேளையில், அண்ணாமலை இன்னும் பாஜகவில்தான் இருக்கிறாரா என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதமாக இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது. வானதி சீனிவாசனுடன் இணைந்து ஒரே அலைவரிசையில் அவர் பதிவிட்டிருப்பது, அண்ணாமலை இன்னும் பாஜகவின் அதிகாரப்பூர்வ குரலாகவே செயல்பட்டு வருகிறார் என்பதைத் தெளிவுபடுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். எவ்வாறாயினும், இந்த “ஒரே வார்த்தை” சர்ச்சை தற்பொழுது சோஷியல் மீடியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
