Connect with us

என்ன இப்படி ஊமக்குத்தா குத்தி இருக்காரு… ஆளவந்தான் படம் பாத்துட்டு கமலுக்கு கடிதம் எழுதிய சுஜாதா- தோல்வியைக் கரெக்ட்டாக கணித்தாரா?

CINEMA

என்ன இப்படி ஊமக்குத்தா குத்தி இருக்காரு… ஆளவந்தான் படம் பாத்துட்டு கமலுக்கு கடிதம் எழுதிய சுஜாதா- தோல்வியைக் கரெக்ட்டாக கணித்தாரா?

 

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் பல பரிசோதனை முயற்சிகளை செய்துகொண்டிருந்த காலத்தில் உருவான படம்தான் ஆளவந்தான். மிகப் பிரம்மாண்டாம அதி உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த படத்தைப் படமாக்கி இருந்தார்கள். மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்து தயாரிப்பாளர் தாணுவுக்கு மிக பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இந்த படத்தின் தோல்விக்கு மோசமான திரைக்கதைதான் காரணம். இந்நிலையில் கமல்ஹாசனுக்கு அவரது நெருங்கிய நண்பராக இருந்த எழுத்தாளர் சுஜாதா ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் படத்தில் என்னென்ன பிரச்சனை என்று துல்லியமாக கமலுக்கு எடுத்துரைத்துள்ளார்.

   

சுஜாதாவின் கடிதம்:-

ஆளவந்தான் பிரீமியர் ஷோவைப் பார்த்துவிட்டு உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். டெலிபோன் செய்தபோது நீங்கள் பம்பாய் சென்றிருப்பதாக ஷண்முகம் சொன்னார். படத்தைப் பற்றிய எனது கருத்துக்களை உடனே பதிவு செய்துகொள்ளத் தோன்றியதால் இந்தக் கடிதம்.

முதலில் வாழ்த்துக்கள் ! தமிழ் சினிமாவில் ஹாலிவுட் தரத்தைத் தொழில் நுட்பத்திலும், சண்டைக் காட்சிகளிலும், கிராஃபிக்ஸ் பயன்பாட்டிலும் கொண்டுவர முடியும் என்று நிரூபித்ததற்காக. நாம் அவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவானவர்கள் அல்ல என்பதை நிலைநாட்டியது இந்தப் படத்தின் மிகப் பெரிய சாதனை என்று சொல்வேன். குறிப்பாக, சினிமாவின் எல்லா சாத்தியக்கூறுகளையும் கதை சொல்லும் முறையில் பயன்படுத்தி ஒருவிதமான cult film. சில சமயம் Freak Out மாதிரி இருக்கிறது படம். அதில் தாங்கள் நடிக்கும் பாத்திரத்தில் விஜய் நடிப்பு இயல்பாகவும், நந்தகுமாரின் நடிப்பு அச்சமூட்டுவதாகவும் இருந்தது.

#image_title

 

இத்தனைச் சிறப்புகள் இருந்தும் கதையில் / திரைக்கதையில் நீங்கள் அதிகம் சிரத்தைக் காட்டவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு கதாசிரியன் என்ற கோணத்தில் எனக்கு ஏற்பட்ட குழப்பங்கள் இவை:

  1. நந்து ஏன் பெண்களை ஒரு மிஸோகைனிஸ்ட (misogynist) என்று சொல்லும் அளவுக்கு வெறுக்கிறான்? பெண்களைக் கண்டாலே கத்தியைத் தூக்குகிறான்; கொல்ல வேண்டும் என் நினைக்கிறான் என்பதற்கான காரணம் பின்னால் ஃபிளாஷ்பேக்கில்தான் தவணைமுறையில் தெளிவுபடுத்தப்படுகிறது. ஃபிளாஷ்பேக் லேட்டாக வருகிறது. மேலும் அதில் காணப்பட்ட  சம்பிரதாயமான சித்திக் கொடுமையும் காட்சிகளும் அவசரமாக மனதில் பதியாமல் எடுக்கப்பட்டதால் நந்துவின் மேல் ‘ஸிம்பதி’ வருவதற்கு போதுமானதாக இல்லை. இரு இப்படத்தின் மிகப்பெரிய குறை. இதனால் பெண்கள் இந்தப் படத்திற்குப் போகத்  தயங்குவார்கள்.  ஃபிளாஷ்பேக்கை சற்று முன்பே இன்னும் அழுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  2. விஜய்யும் அவன் மனைவியும் முதலில் நந்துவைச் சந்திக்கச் செல்லும்போது அவன் பெண்களைப் பற்றி வக்கிரமாகப் பேசுவது அவளைத் திடுக்கிட வைப்பதைத் தொடர்ந்து ஒரு காட்சியில் “நந்து ஏன் இந்த மாதிரி பெண்களை வெறுக்கிறான் என்பதை விஜய் மூலம் இன்னும் கொஞ்சம் பிடிப்பாகக் காரணம் சொல்லப்பட்டிருந்தால், நந்து மேல் அனுதாபம் வந்திருக்கும்.
  3. ஒரே படத்தில் பல விஷயங்களைச் சொல்ல வேண்டும், பல திறமைகளைத் தொழிற்நுட்பத்தில் காட்டவேண்டும் என்கிற உங்களது பரபரப்பினால் படம் நிச்சயம் பல இடங்களில் பாதிக்கப்படுகிறது.
  4. மாமாவின் தொண்டை கேன்ஸர், அதனால் அவர் கருவி மூலம் பேசுவது ஒரு அனாவசியமான கவனக் கலைப்பு.
  5. தோடா இனத்தவர் வாழ்க்கை முறை; அவர்கள் டைய்லெக்ட் (dialect) – வட்டார வழக்கு; இவை சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. Drugs, Hallucination ஆகியவற்றையும் stylistic ஆகப் பயன்படுத்துவதால் குழப்பம்தான் அதிகமாகிறது. இது படத்தைப் பார்க்கும் சாதாரண ஜனங்களுக்குப் புரிவதில்லை என்று சொன்னார்கள்.
  6. மனிஷா கொய்ராலாவை ஒரு காட்சியில் அறிமுகப்படுத்திவிட்டு, அடுத்த காட்சியில் நடனம் ஆடவிட்டு, அதற்கடுத்த காட்சியில் வன்முறை அதிகமாக இருப்பதால் கார்ட்டூன் (அனிமேஷன்) முறையில் கொன்றுவிடுவது திரைக்கதையில் பாத்திரப் படைப்பாளிக்கான எளிய விதிகளை மீறுகிறது. Guest appearance என்பதால் அவரைக் கொன்றிருக்கவே வேண்டாம்.
  7. இதே போல கதையில் விஸ்தாரமாகக் காட்டப்பட்டு பயன்படுத்தாத விஷயம் நந்து செத்துப் போய்விட்டான் என்று கடித்துக் குதறி, தலையை வெட்டி, அதிகாரிகளை நம்ப வைப்பது விரயமாகிவிடுகிறது. அடுத்த ஸீனிலேயே விஜய், “நந்து செத்துப் போயிருக்க மாட்டான்” என்று தீர்மானமாகச் சொல்லிவிடுகிறான்.
  8. பரபரப்பான சண்டைக் காட்சிகளும், துரத்தல் காட்சிகளும், பிரமாதமான கிராஃபிக்ஸ் உத்திகள் என்று இருந்தாலும் திரைக்கதையின் பலவீனத்தினால் அவை மனதில் பதியாமல் விரயமாகிவிடுகின்றன.

படம் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த விமர்சனம் தேவையற்றதாகத் தெரியலாம். மேலும், இந்தப் படத்தின் குறைகளுக்கு முழுப்பொறுப்பும் உங்களுடையதுதான் என்று சொல்ல மாட்டேன். சினிமா எடுப்பதின் மற்ற அவஸ்தைகளும், இடைவெளியில் தங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகளும், மன உளைச்சலும், தாமதங்களும், முடிக்க வேண்டிய கட்டாயங்களும் காரணமாக இருக்கலாம்.

ஆனாலும், ஒரு முழுதான, மன நிறைவான படத்தை இந்தப் படம் தங்களிடமிருந்து இப்போதும் எதிர்பார்க்க வைக்கிறது என்பது மட்டும் நிஜம். ‘பம்மல் கே. சம்பந்தம்,’ ‘நரன்,’ போன்ற படங்களில் அதை நிச்சயம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன்.

 

Writer sujatha review for aalavanthan movie to kamal

Continue Reading
To Top