“1 படம் 200 கோடி.. அப்போ 70 படத்துக்கு 14,000 கோடி”…. எம்.ஜி.ஆர் மாதிரி சொத்தை எழுதி வைப்பாரா விஜய்?…. எடப்பாடி பழனிசாமியின் ஓப்பன் சேலஞ்ச்….!

By Nanthini on கார்த்திகை 1, 2026

Spread the love

அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டுப் பேசி வரும் தவெகவினருக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். “கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரரான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், தனது வாழ்நாளின் இறுதியில் தனது சொத்துக்கள் அனைத்தையும் ஏழை எளிய மக்களுக்கும், ஆதரவற்றோருக்கும் எழுதி வைத்தார். எம்.ஜி.ஆரைப் போல் ஆட்சித் தருவேன் எனக் கூறும் விஜய், தன் சொத்துக்களை அதுபோல ஏழை எளிய மக்களுக்கு எழுதி வைப்பாரா?” என்று எடப்பாடி பழனிசாமி சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

மேலும் தவெக ஆட்சியில் மக்கள் சந்தித்து வரும் கடுமையான விலைவாசி உயர்வைக் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடினார். “ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற இந்த 6 மாத காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துவிட்டன. அரிசி கிலோவுக்கு ரூ.20-ம், சர்க்கரை ரூ.25-ம் உயர்ந்துள்ளதோடு, பருப்பு விலை 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மளிகைப் பொருட்களின் விலை ஒட்டுமொத்தமாக 40 சதவீதம் உயர்ந்து மக்கள் வயிற்றில அடித்துள்ளது. வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆவின் இனிப்புகளின் விலையைக் கூட இந்த அரசு உயர்த்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் விலைவாசி முற்றிலுமாகக் கட்டுக்குள் இருந்தது” என அவர் ஒப்பீடு செய்து பேசினார்.

   

சினிமா டிக்கெட் விற்பனை மற்றும் லஞ்சக் கலாச்சாரம் குறித்தும் எடப்பாடி பழனிசாமி தனது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “சினிமாவில் 100 ரூபாய் டிக்கெட்டை 2,000 ரூபாய்க்கு விற்று, அன்றாடம் கஷ்டப்படும் ஏழை எளிய மக்களிடம் சுரண்டிப் பிழைத்தவர்தான் இன்றைய முதலமைச்சர் விஜய். ஊழலே இல்லாத ஆட்சி என்று கூறும் தவெக ஆட்சியில் லஞ்சம் இரட்டிப்பாகியுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் ரூ.5,000 லஞ்சமாகக் கேட்கப்பட்ட இடங்களில், தற்போது ரூ.10,000 கேட்கிறார்கள். எந்த அரசு அலுவலகத்திற்குச் சென்றாலும் லஞ்சம் இல்லாமல் எந்தவொரு காரியமும் நடப்பதில்லை” என்று அவர் வேதனை தெரிவித்தார்.

   

விஜய்யின் வருமானம் மற்றும் தேர்தல் பிரமாணப் பத்திரம் குறித்தும் அடுக்கடுக்கான கேள்விகளை எடப்பாடி பழனிசாமி எழுப்பினார். “ஒரு படத்திற்கு ரூ.200 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு மக்களுக்குச் சேவை செய்ய வந்திருப்பதாகக் கூறுகிறார்கள். அப்படியென்றால், சினிமாவை விட அரசியலில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளாரா? இதுவரை 70 படங்களில் நடித்துள்ள விஜய் கணக்குப்படி ரூ.14,000 கோடி சம்பாதித்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் வெறும் ரூ.600 கோடி மட்டுமே கணக்கு காட்டியுள்ளார். மீதி 800 கோடிக்கும் அதிகமான பணம் எங்கே போனது?” என எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான கேள்விகளால் தொண்டர்களிடையே உரையாற்றினார்.

 

இறுதியாக, அதிமுகவின் வலிமையையும் தொண்டர்களின் அர்ப்பணிப்பையும் சுட்டிக்காட்டி தனது உரையை எடப்பாடி பழனிசாமி நிறைவு செய்தார். “நான் மக்களுடன் மக்களாக இருந்து, அவர்களின் கஷ்ட நஷ்டங்களை நேரடியாகப் பார்த்துப் புரிந்து கொண்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன். அதிமுகவை யாராலும் அழிக்கவோ அல்லது உடைக்கவோ முடியாது; அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள்தான் இறுதியில் அழிந்து போவார்கள். நாட்டு மக்களுக்கும் அதிமுகவிற்கும் இறைவனால் அளிக்கப்பட்ட கொடை தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்” என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.