திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் கேட்டவரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி முருகன். இவருக்குக் காஞ்சனா என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி இரவு முருகன் அதிக மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது மனைவியிடம் சாப்பாடு கேட்க, காஞ்சனா காலையில் சமைத்த சாப்பாடும் முந்தைய நாள் செய்த கறிக்குழம்பும் இருப்பதாகக் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த முருகன், “வீட்டில் போனை பார்த்துக்கொண்டு என்ன செய்கிறாய்?” என மனைவியைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் மயங்கிப் படிட்டில் விழுந்த காஞ்சனாவை, பச்சை நிறப் புடவையால் கழுத்தை நெரித்துக் கொன்று, உடலைத் தூக்கில் தொங்கவிட்டுத் தற்கொலை நாடகமாடியுள்ளார்.
பின்னர் தூக்கில் இருந்த புடவையை அறுத்துப்போட்டுவிட்டு மனைவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூச்சலிட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த ஆதமங்கலம்புதூர் போலிஸார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில் காஞ்சனாவின் உடலில் எலும்பு முறிவுகளும் காயங்களும் இருப்பது அம்பலமானது. போலிஸாரின் கெடுபிடி விசாரணையில் கொலையை ஒப்புக்கொண்ட முருகனைப் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
