குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள புகழ்பெற்ற ராஜ்வி அரண்மனையில் நடைபெற்ற நவரத்திரி கொண்டாட்டம், வழக்கமான கர்ாபா நடனங்களையும் தாண்டி உலகளாவிய சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பெண்கள் அமைப்பைச் சேர்ந்த ராஜ்புத் மற்றும் க்ஷத்ரிய சமுதாயப் பெண்கள், பாரம்பரிய ஆடை அணிந்து பைக் மற்றும் ஜீப் போன்ற வாகனங்களில் பயணித்தபடி வாள் வீச்சு நடனத்தை சாகசமாகச் செய்து அசத்தியுள்ளனர்.
துர்கா தேவியின் வீரத்தையும், நல்லெண்ணத்தின் வெற்றியையும் போற்றும் வகையில் நிகழ்த்தப்பட்ட இந்தச் சாகசத்தில், பல நாட்கள் பயிற்சி பெற்ற பெண்கள் எவ்வித அச்சமுமின்றி ஓடும் வாகனங்களின் மீது நின்று வாள்களைச் சுழற்றி தங்களது தற்காப்புக் கலைத் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். பாரம்பரியக் கலைகளை அழியாமல் காக்கும் நோக்கில் நிகழ்த்தப்பட்ட இந்தத் திகைப்பூட்டும் சாகச வீடியோக்கள் தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி நெட்டிசன்களின் வியப்பையும் பாராட்டுக்களையும் பெற்று வருகின்றன.
