சென்னையில் போலி வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறி சுமார் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த கும்பலைச் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முருகேஷ் மற்றும் பெண்களான எப்சி, பஞ்சவர்ணம் ஆகிய மூன்று பேர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த சத்தியநாதன் என்பவரைத் தொடர்பு கொண்டு, அவரை நம்பவைத்து ஒரு போலி செயலியைப் பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளனர்.
அந்தச் செயலி மூலம் அவரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாயைப் பறித்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் தூத்துக்குடியில் பதுங்கியிருந்த இந்தக் கும்பலைத் தேடிப்பிடித்து போலீசார் சிறையில் அடைத்தனர். பொதுமக்கள் யாரும் அறிமுகமில்லாத நபர்கள் பகிரும் முதலீட்டுத் திட்டங்களையோ அல்லது செயலிகளையோ நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
