டெல்லி அரசால் பெண்களுக்காகத் தொடங்கப்பட்டுள்ள ‘லட்சுமி யோஜனா’ உதவித்தொகை திட்டத்திற்கான படிவங்களில் கையெழுத்து வாங்க, பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் அனில் ஜா வத்ஸை சந்திக்கச் சென்றனர். அப்போது அவர் வெறும் பனியன் மற்றும் அரைக்கால் சட்டையுடன் அமர்ந்து கோரிக்கை மனுக்களைப் பரிசீலிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஒரு மக்கள் பிரதிநிதி, பொதுமக்களைச் சந்திக்கும் போது கண்ணியமான முறையில் ஆடை அணியாமல் அநாகரிகமாகச் செயல்பட்டதாக டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சட்டமன்ற நடவடிக்கைகளின் போதும் அவர் தவறான முறையில் நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டிய முதலமைச்சர், அவரது எம்.எல்.ஏ பதவியை உடனடியாகப் பறிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அனில் ஜா வத்ஸ், தன் மீதான விமர்சனங்கள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனப் பதிலடி கொடுத்துள்ளார். மக்களின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்க்க முடியாமல் ஆளும் அரசு திணறி வருவதாகவும், தங்களின் நிர்வாகத் தோல்விகளை மறைத்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே தன் மீது இதுபோன்று வீண்பழிகளைச் சுமத்துவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் நலத்திட்டப் பணிகளின் போது நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், தற்போது டெல்லி சட்டப்பேரவையில் இரு தரப்புக்கும் இடையிலான பெரும் அரசியல் மோதலாக மாறியுள்ளது.
