தமிழக அரசியல் களம் தற்போது மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தால் பெரும் பரபரப்பைக் கண்டுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘குலவிளக்கு’ திட்டத்தின் கீழ் அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என அதிரடி வாக்குறுதியை அளித்துள்ளார். இந்த அறிவிப்பு ஆளும் திமுக அரசுக்குச் சற்று நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. எதிர்க்கட்சியின் இந்த கவர்ச்சிகரமான வாக்குறுதி, பெண்களின் வாக்குகளைத் தன் பக்கம் ஈர்க்கக்கூடும் என்பதால், அதற்குப் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளுங்கட்சி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் சவாலை முறியடிக்கும் வகையில் தற்போதைய மகளிர் உரிமைத் தொகையான ரூ.1,000-த்தை உயர்த்துவது குறித்து திமுக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி, அதிமுகவை விட ஒரு படி மேலே சென்று, இந்தத் தொகையை ர. 2,500 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ‘ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை’ என்ற போட்டி, வரும் தேர்தலில் மகளிரின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
