தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகின்றது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஜூலை 15 முதல் அக்டோபர் மாதம் வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நகர பகுதிகளில் 3,768, கிராம பகுதிகளில் 6,232 முகாம்கள் நடத்தப்படும். இதில் நகரங்களில் 43 சேவைகள், கிராமங்களில் 46 சேவைகள் பெறலாம் என்றும் இதில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதி உள்ள பெண்கள் விண்ணப்பங்களை தரலாம் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
