ஓடும் இரயில் ஒன்றில் பெண் பயணி ஒருவர் நிலக்கடலைத் தோல்களை இருக்கைக்கு அடியில் வீசி எறிந்து பொது இடத்தை அசுத்தப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பரவி வரும் இந்த வீடியோ, இந்தியாவின் பொதுப் போக்குவரத்து அமைப்புகளில் இருக்க வேண்டிய பொதுநலக் குணம் மற்றும் தூய்மைப் பராமரிப்பு குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
வைரலான அந்த வீடியோவில், இரயில் பெட்டியின் நுழைவாயில் அருகே அமர்ந்திருக்கும் ஒரு பெண், நிலக்கடலையைச் சாப்பிட்டுக் கொண்டே அதன் தோல்களைக் குப்பைத் தொட்டியில் போடாமல், தனது இருக்கைக்கு அடியிலேயே தொடர்ந்து வீசுகிறார். அதுமட்டுமின்றி, இரயிலில் கை கழுவும் வசதிகள் இருந்தபோதிலும், அவர் அமர்ந்த இடத்திலேயே கைகளைக் கழுவி, அந்தத் தண்ணீரை இரயில் பெட்டியின் தரையிலேயே வடியவிடுகிறார். இந்த ஐந்து மணி நேரப் பயணத்தின் போது, சக பயணி ஒருவர் இதனைத் தனது மொபைலில் படம்பிடித்துள்ளார். மேலும், அந்தப் பெண் இரவு நேரத்தில் மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தனது மொபைலில் அதிக சத்தத்துடன் வீடியோக்களைப் பார்த்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
https://www.instagram.com/reel/DaEtuxcsEpM/?utm_source=ig_web_button_share_sheet
இந்தத் தூய்மையற்ற செயலைக் கண்ட சக பயணி, தேவையற்ற வாக்குவாதங்கள் அல்லது சண்டைகளைத் தவிர்ப்பதற்காக அந்தப் பெண்ணை நேரில் கண்டிக்கவில்லை என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இரயில்வே நிர்வாகம் மட்டுமே தூய்மைக்கு முழுப் பொறுப்பாக முடியாது என்றும், பொது இடங்களைப் சுத்தமாக வைத்திருப்பது பயணிகளின் கடமை என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
