புனேவைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வாலுக்கும் சியா கோயல் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நாட்களில் லோகட் என்ற பகுதிக்கு கேத்தனை அழைத்துச் சென்ற சியா கோயல், அங்குள்ள ஒரு மலை உச்சியிலிருந்து அவரைத் தள்ளிக் கொலை செய்தார். இந்த மரணம் குறித்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், சியா கோயல் ஏற்கனவே சேத்தன் சவுத்ரி என்பவரை காதலித்து வந்ததும், கேத்தனுடனான திருமணத்தைத் தடுப்பதற்காகவே இருவரும் இணைந்து இந்தத் துணிகரக் கொலையைச் செய்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.
தற்போது இந்த வழக்கில் போலீசாரின் விசாரணையில் மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் சேத்தன் சவுத்ரி ஆகிய இருவரும், இந்தச் சம்பவத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டது டிஜிட்டல் தடவியல் ஆய்வின் மூலம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கொலையை எவ்வித தடயமும் இல்லாமல் மிகக் கச்சிதமாகச் செய்து முடிப்பதற்காக, அவர்கள் இருவரும் பல க்ரைம் வெப் சீரிஸ்களைப் பார்த்துத் திட்டமிட்டதும் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.
கொலையாளிகளின் வாட்ஸ்அப் அரட்டைகள் மற்றும் கூகுள் தேடல் வரலாறுகளை போலீஸார் ஆய்வு செய்தபோதுதான் இந்த உண்மைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தன. இதற்கிடையில், சியாவை ரகசியத் திருமணம் செய்து கொண்ட சேத்தன் சவுத்ரிக்கு ஏற்கனவே வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த டிஜிட்டல் சான்றுகளின் அடிப்படையில் போலீஸார் தங்களது அடுத்தகட்டப் புலனாய்வை தீவிரப்படுத்தியுள்ளனர்.
