தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம் கிராமத்தில், வளர்ப்பு நாய்க்குட்டியின் நகம் கீறியதால் சுமதி (47) என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது நாய்க்குட்டியைச் சிகிச்சைக்காகத் தூக்கிச் சென்றபோது, சுமதியின் தோளில் நகம் பட்டுக் கீறல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட நாய்க்குட்டி என்பதால் அவர் அதனைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.
ஆனால், சில நாட்களுக்குப் பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ‘ரேபிஸ்’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேல் சிகிச்சைக்காக மதுரைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் முன்னெச்சரிக்கையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். செல்லப்பிராணிகள் கடித்தாலோ அல்லது சிறிய அளவில் கீறல் ஏற்பட்டாலோ அலட்சியம் காட்டாமல் உடனடியாகத் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
