கடுமையான கார் விபத்தில் சிக்கியபோதும், காரின் உறுதியான கட்டமைப்பு காரணமாகத் தனது குடும்பத்தினர் உயிர் தப்பியதாகப் பெண் ஒருவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மஹிந்திரா நிறுவனத்தின் XUV ரக கார் விபத்தில் பலத்த சேதமடைந்தபோதிலும், அதில் பயணித்தவர்கள் பெரிய ஆபத்தின்றி உயிர் பிழைத்த சம்பவம் கவனத்தைப் பெற்றுள்ளது.
புனே–மும்பை விரைவுச்சாலையில் நடந்த இந்த விபத்து குறித்து ரோஷ்னி ஸ்வாதியா என்ற பெண் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்போது தனது 7 மாதக் குழந்தையுடன் குடும்பத்தினருடன் காரில் பயணித்துக் கொண்டிருந்ததாகவும், பின்னால் வேகமாக வந்த மற்றொரு கார் மோதியதில் இவர்களது XUV கார் இரண்டு முறை சுழன்று சாலைத் தடுப்பில் மோதியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் காரின் முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகள் பலத்த சேதமடைந்தன. இருப்பினும், காருக்குள் இருந்த குடும்பத்தினர் உயிர் தப்பியதுடன், சிறிய காயங்களுடன் வெளியே வந்துள்ளனர். விபத்தின் தீவிரத்தை உணர்ந்த பெண், தனது குடும்பத்தினரின் உயிரைக் காப்பாற்றிய காரின் உறுதியான கட்டமைப்பைப் பாராட்டி, மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
