உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்குத் தெரியாத எண்ணில் இருந்து ஒரு போன்கால் வந்தது. தவறான எண் என்று கூறிப் பேச்சைத் தொடங்கிய அந்தப் பெண், தனது இனிமையான குரலால் வாலிபரை வசீகரித்துத் தொடர்ந்து பேசினார். நாளுக்கு நாள் மணிநேரக் கணக்கில் நீடித்த இந்தப் போன் உரையாடல்கள், விரைவில் அவர்களிடையே காதலாக மலர்ந்தது. காதலின் ஆழம் அதிகமானதும், அந்தப் பெண் வீடியோ கால் பேசுமாறு விருப்பம் தெரிவித்தார்.
ஆர்வம் தாங்காமல் வீடியோ காலை ஆன் செய்த வாலிபர், அந்தப் பெண்ணின் வசீகர வார்த்தைகளில் மயங்கி, கேமரா முன்னால் தன் உடலைக் காட்டி அநாகரிகமாக நடந்துகொண்டார். ஆனால், அதுவே தனக்கு அமைக்கப்பட்ட மிகப்பெரிய வலை என்பதை அந்த ஏமாளி வாலிபர் உணரவில்லை. வாலிபரின் இந்த அந்தரங்கக் காட்சிகளை அந்தப் பெண் இரகசியமாகத் தன் போனில் பதிவு செய்து, அவரது ஆசையைத் தனது சதித்திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார்.
வீடியோ கால் முடிந்த சில நிமிடங்களிலேயே அந்தப் பெண் தன் நிஜரூபத்தைக் காட்டினார். பதிவு செய்யப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவதாக மிரட்டி 2 லட்சம் ரூபாய் பறித்தார். சில நாட்கள் கழித்து மீண்டும் 2 லட்சம் ரூபாய் கேட்டுப் பிளாக்மெயில் செய்யவே, உஷாரான வாலிபர் உடனடியாகச் சைப்ரைம் போலீசில் புகாரளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஒளிந்திருந்த அந்தப் பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
