அடச்சீ வெக்கமா இல்லையா?…. தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் கண்ட இடத்தில் முதியவர்…. சிங்கப் பெண்ணாக மாறி பாடம் புகட்டிய இளம்பெண்….!

By Nanthini on மாசி 4, 2026

Spread the love

சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் அரங்கேறிய ஒரு துணிகரமான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது தாயுடன் முடிச்சூர் செல்வதற்காக தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஷேர் ஆட்டோவுக்காகக் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணிற்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அந்த நபரின் அநாகரீகமான செயலால் கடும் அதிர்ச்சியடைந்த இளம்பெண், சற்றும் தயங்காமல் துணிச்சலுடன் செயல்பட்டார். மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அந்த நபரின் சட்டையைப் பிடித்து இழுத்து அவர் கன்னத்தில் பளார் என அறைந்தார். “எங்கே ஓடுகிறாய்?” எனக் கேட்டு அந்த நபரைத் தப்பிச் செல்ல விடாமல் தடுத்ததோடு, அங்கிருந்த மக்கள் முன்னிலையில் அவரது செயலைக் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

   

இச்சம்பவத்தைக் கண்ட அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக இளம்பெண்ணிற்கு ஆதரவாகத் திரண்டனர். அந்த நபரைப் பிடித்து அங்கிருந்த பெண் காவலர்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்தவர் என்பதும், தாம்பரம் பகுதியில் தங்கி சமையல் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. தான் மது போதையில் தெரியாமல் செய்துவிட்டதாகக் கூறி அந்த நபர் தப்பிக்க முயன்றார்.

   

இறுதியாக, காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட அந்த நபர், தனது தவறை ஒப்புக்கொண்டு இனி இது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று கூறி அந்த இளம்பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். நெரிசலான பொது இடத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களைப் பொறுத்துக் கொள்ளாமல், அந்த இளம்பெண் காட்டிய துணிச்சல் சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.