விசாகப்பட்டினம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காதலியை, காதலன் தனது கள்ளக்காதலி மற்றும் நண்பருடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்து குளத்தில் வீசிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தைச் சேர்ந்த துமராடா கிராமத்துக் குளம் ஒன்றில் இருந்து கடந்த ஜூன் 9ஆம் தேதி 34 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், கொலை தொடர்பாக மூன்று பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலையான பெண் பாலகொண்டா மண்டலம், பர்னா சீதம்பேட்டா பகுதியைச் சேர்ந்த உஷா ராணி (34) என்பது தெரியவந்தது. இவர் முந்தைய அரசாங்கத்தில் தன்னார்வலராக பணியாற்றியபோது, அவருடன் பணியாற்றிய புவனேஸ்வர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்ததோடு, அடுத்ததாகத் திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால், திருமணப் பேச்சு எழுந்தபோதுதான் புவனேஸ்வரின் அசல் முகம் உஷா ராணிக்குத் தெரியவந்துள்ளது.
புவனேஸ்வர் ஏற்கனவே அப்பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஒப்பந்த செவிலியராகப் பணிபுரியும் கிருபாராணி என்ற திருமணமான பெண்ணுடன் முறையற்ற உறவில் இருந்துள்ளார். தன்னைத் திருமணம் செய்யுமாறு உஷா ராணி தொடர்ந்து வற்புறுத்தியதால், கள்ளக்காதலி கிருபாராணியுடன் சேர்ந்து வாழ புவனேஸ்வர் திட்டமிட்டுள்ளார். இதனால் உஷா ராணியை வழிநெடுகக் கொலை செய்யத் துணிந்த புவனேஸ்வர், தனது கள்ளக்காதலி கிருபாராணி மற்றும் நண்பரான தேஜேஸ்வர ராவ் ஆகியோருடன் இணைந்து ஒரு கொடூரமான கொலைத் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
அதன்படி, கடந்த ஜூன் 6ஆம் தேதி உஷா ராணியைத் தங்களது காரில் அழைத்துச் சென்ற மூவரும், அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துள்ளனர். அவர் மயக்கமடைந்ததும் காரிலேயே கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். முதலில் ஸ்ரீகாகுளம் மாவட்டம் அமூலவலசா அருகே உள்ள ஒரு குளத்தில் உடலை வீசியுள்ளனர். ஆனால், அங்கு நீர்மட்டம் குறைவாக இருந்ததால் உடல் வெளியே தெரிந்துள்ளது. இதனால் பயந்துபோன அவர்கள், உடலை மீண்டும் காரில் எடுத்துக்கொண்டு துமராடா கிராமத்தில் உள்ள மற்றொரு குளத்திற்குச் சென்று, சடலத்தின் மீது கனமான கற்களைக் கட்டி உள்ளே வீசிவிட்டுத் தப்பியுள்ளனர். ஜூன் 9 அன்று உடல் மிதந்ததைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய துரித விசாரணையில் புவனேஸ்வர், கிருபாராணி, தேஜேஸ்வர ராவ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
