மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணிபுரியும் பெண் ஒருவர், வெறும் 299 ரூபாய் மதிப்புள்ள உடைக்காக தனது ஒரு லட்ச ரூபாயைப் பறி கொடுத்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் பக்கத்தில் வந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தைப் பார்த்து, மலிவான விலையில் உடை கிடைப்பதாக எண்ணி அவர் முன்பதிவு செய்துள்ளார். ஆரம்பத்தில் ஆடையின் விலையான 299 ரூபாயை மட்டுமே கட்டச் சொன்ன மோசடி கும்பல், அதன் பிறகுதான் தங்களது கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளது.
உடை டெலிவரி செய்யப்பட வேண்டும் என்றால் ஷிப்பிங் கட்டணம், ஜிஎஸ்டி (GST), பார்சலை ட்ராக் செய்வதற்கான கட்டணம் மற்றும் சரிபார்ப்புக் கட்டணம் எனப் பல்வேறு காரணங்களைக் கூறி அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து பணம் கேட்டுள்ளனர். “நீங்கள் கட்டும் பணம் மீண்டும் உங்கள் கணக்கிற்கே வந்துவிடும் (Refund)” என அவர்கள் கொடுத்த பொய் வாக்குறுதியை நம்பி, அந்தச் செவிலியரும் அடுத்த 5 நாட்களில் சிறுகச் சிறுக ஒரு லட்ச ரூபாய் வரை அவர்கள் கேட்ட கணக்கிற்குப் பரிமாற்றம் செய்துள்ளார்.
இறுதியில் ஆடையோ அல்லது கட்டிய பணமோ திரும்பக் கிடைக்காததைக் கண்டு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆன்லைன் ஷாப்பிங் என்ற பெயரில் நடக்கும் இத்தகைய நூதன மோசடிகள் குறித்துப் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
