தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராகவும், சமூக ஊடகங்களில் பிரபலமான கன்டென்ட் கிரியேட்டராகவும் அறியப்பட்டவர் நாஞ்சில் விஜயன். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தனது தனித்துவமான நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு பேச்சு, பெண் வேடமிட்டு செய்யும் நகைச்சுவை மற்றும் எதார்த்தமான நடிப்புத் திறன் மூலம் குறுகிய காலத்திலேயே பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார். அண்மைக் காலங்களில் சில தனிப்பட்ட மற்றும் சட்ட ரீதியான சர்ச்சைகளில் சிக்கி ஊடக வெளிச்சத்தில் இருந்தபோதிலும், சின்னத்திரை மற்றும் யூடியூப் தளங்களில் தொடர்ந்து தனது நகைச்சுவைப் பதிவுகள் மற்றும் சுவாரசியமான காணொளிகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் நாஞ்சில் விஜயன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சூர்யா தேவி என்பவர் புகார் அளித்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு நாஞ்சில் விஜயனின் தங்கை திருமணத்திற்காக உதவி மனப்பான்மையுடன் ரூ.2 லட்சம் கடனாக வழங்கியதாகவும், தற்போது தனக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழல் காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்தே அந்தப் பணத்தைத் திரும்பக் கேட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். சாதாரண அழைப்பில் பேசினால் ‘கால் ரெக்கார்டு’ செய்துவிடுவேன் என்பதால் நாஞ்சில் விஜயன் திட்டமிட்டு வாட்ஸ்அப்பில் மட்டுமே பேசியதாகவும், பணத்தை அவரது வலசரவாக்கம் வீட்டில் வைத்து கொடுத்ததால் அதற்கான நேரடி ஆதாரம் தன்னிடம் இல்லை என்பதைச் சாதகமாகப் பயன்படுத்தி, தான் அவரை மிரட்டுவது போல் நாஞ்சில் விஜயன் நாடகமாடுவதாகவும் சூர்யா தேவி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மதுரையில் நடந்த எக்ஸ்போ ஒன்றிற்குத் தன்னை அழைத்த நாஞ்சில் விஜயன், அங்கு வைத்து சில நபர்களைக் கொண்டு தன்னைத் தடுத்து நிறுத்தி வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்வதாக அவர் கூறியுள்ளார். மீண்டும் அந்த எக்ஸ்போவிற்கு வந்தால் 108 பெண்களைக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்க வைப்பேன் என்று ஆட்களை வைத்து மிரட்டுவதாகவும், தன்னிடம் தவறான வீடியோக்கள் இருப்பதாகக் கூறி மிரட்டுவதாகவும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். தனக்குக் குழந்தைகள் இருப்பதால் இந்த விவகாரத்தைக் காவல் துறை மூலம் கொண்டு செல்ல விரும்புவதாகவும், தன்னிடம் உள்ள வாட்ஸ்அப் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு உரிய விசாரணை நடத்தி தனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
