தெலுங்கானா மாநிலம் யாதாத்திரி புவனகிரி மாவட்டத்தில் கணவனின் சந்தேகத்தால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர், தனது இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளகூடம் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா (28) என்பவருக்கும், ரெயில்வே ஊழியரான மகேஷ் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவனின் சந்தேக புத்தியால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஐஸ்வர்யா பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் குடும்பத்தினர் மூலம் சமாதானம் செய்யப்பட்டு மீண்டும் கணவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு அவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது அறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதம் போலீசாரை உலுக்கியது. “மாமியார் வீட்டில் கொடுமை தாங்க முடியாமல் குழந்தைகளைக் கொன்று நானும் தற்கொலை செய்துகொள்கிறேன். என் கணவர் மகேஷ், மாமியார் சத்தம்மா, மாமனார் நரசிம்மா மற்றும் மைத்துனிகள் தான் என் மரணத்திற்கு காரணம். என் நடத்தையில் சந்தேகம் இருந்தால் மகனின் டி.என்.ஏ.வை பரிசோதனை செய்து பாருங்கள்” என்று அதில் அவர் ஆவேசமாக எழுதியிருந்தார்.
மேலும், தனது தந்தைக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில், “பெண்ணாகப் பிறப்பதும் வாழ்வதும் இந்த உலகில் அசாத்தியம். வரதட்சணையாகக் கொடுத்த 32 லட்சம் ரூபாய் மற்றும் 30 சவரன் நகைகளை மட்டுமே அவர்கள் பார்த்தார்கள்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கடிதங்களை ஆதாரமாகக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கொடுமையும், சந்தேகமும் ஒரு தாயையும் இரண்டு பிஞ்சு குழந்தைகளையும் பலிவாங்கியுள்ள விதம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
