சேலம் அரிசிபாளையம் குணபல ராமசாமி தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டின் மொட்டை மாடி தண்ணீர் தொட்டியில், அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டி மூட்டை கட்டி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீட்டின் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் பூசாரி ரமேஷ் என்பவர் அளித்த புகாரின்பேரில் பள்ளப்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையிட்டனர். அப்போது, அப்பெண்ணின் உடல் ஏழு துண்டுகளாக வெட்டப்பட்டு, மூன்று மூட்டைகளில் அடைக்கப்பட்டு தொட்டிக்குள் வீசப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது.
இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக பள்ளப்பட்டி காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட பெண் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் மற்றும் எந்தக் காரணத்திற்காக இந்த கொடூரக் கொலை அரங்கேற்றப்பட்டது என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குடியிருப்பு பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் சேலம் மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
