ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஆனந்தபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். தேங்காய் வியாபாரியான இவருக்கு, கோசலை (45) என்ற மனைவியும், திவ்யா (23) என்ற மகளும் உள்ளனர். ஒரே குடும்பமாக வசித்து வந்த இவர்களில், திவ்யாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (27) என்பவருடன் கடந்த ஆறு மாதங்களாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்துள்ளனர்.
இவர்களது காதல் விவகாரம் திவ்யாவின் பெற்றோருக்குத் தெரியவரவே, அவர்கள் காதலுக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல், கதிர்வேலின் குடும்பத்தினரும் இந்த காதலை ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இருதரப்பிலும் சம்மதம் கிடைக்காததால், கடந்த சில நாட்களாக திவ்யாவின் வீட்டில் பெற்றோருக்கும் மகளுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் ஏற்பட்டு வந்துள்ளதாக அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், திவ்யாவைத் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்த கதிர்வேல், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் திவ்யாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அவரை வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள அழைத்தபோது, இதனைத் திவ்யாவின் தாய் கோசலை கவனித்துவிட்டார். மகளைத் தடுத்து நிறுத்தி, அவருக்குப் புரிய வைக்கப் போராடியுள்ளார். இருப்பினும், தாயின் பேச்சையும் பாசத்தையும் மீறி திவ்யா தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
வளர்த்த மகள் தன் பேச்சை மீறி காதலனுடன் சென்றதால் மிகுந்த மனவேதனையும் அதிர்ச்சியும் அடைந்த கோசலை, வீட்டிற்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்து அறைக்குச் சென்று பார்த்த குடும்பத்தினர், அவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்துத் தகவலறிந்து வந்த அம்மாபேட்டை போலீசார், கோசலையின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தற்கொலைக்குத் தூண்டியதாகத் திவ்யா மற்றும் அவரது காதலன் கதிர்வேல் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
