நடுங்க வைக்கும் சென்னை இரவு… மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் பரிதாப பலி… கண்ணிமைக்கும் நேரத்தில் சோகம்….!

By Nanthini on ஆவணி 24, 2026

Spread the love

சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து, கலாவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடிபுதுநகரைச் சேர்ந்த இவர், நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது மழையால் தண்ணீர் நிரம்பியிருந்த வடிகால் பள்ளத்தை கவனிக்க முடியாமல் உள்ளே விழுந்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இறப்பிற்கான துல்லியமான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அப்பள்ளத்தின் வழியே மின் வயர்கள் சென்றுள்ளதால் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை, மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழுமையான காரணம் தெரியவரும் எனக் கூறியுள்ளது.

   

அரசின் அலட்சியப் போக்கே தனது தாயின் மரணத்திற்கு காரணம் என கலாவதியின் மகள் சங்கீதா வேதனையுடன் குற்றம்சாட்டியுள்ளார். வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றி பாதுகாப்பு தடுப்புகள் அல்லது எச்சரிக்கை பலகைகள் சரியாக அமைக்கப்பட்டிருந்தால் இந்த கொடூர விபத்தையும், உயிர் இழப்பையும் தடுத்திருக்க முடியும் என அப்பகுதி பொதுமக்கள் கடும் ஆத்திரத்துடன் தெரிவிக்கின்றனர்.