தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 10) காரைக்குடியில் மேற்கொண்ட ரோடு ஷோ நிகழ்ச்சியில் பெரும் மக்கள் கூட்டம் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில், விஜய்யைக் காண்பதற்காகக் காத்திருந்த பிரியா என்ற பெண் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாகப் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் மற்றும் தொண்டர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, மதுரையில் இருந்து காரைக்குடி நோக்கி விஜய் தனது பிரச்சார வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, உற்சாக மிகுதியால் ஏராளமான இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் அவரைப் பின்தொடர்ந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இளைஞர்கள் வந்த பைக்குகள் விபத்துக்குள்ளானதில் சிலர் காயமடைந்தனர். விஜய்யின் வருகையையொட்டி காரைக்குடி முழுவதும் தொண்டர்களின் ஆரவாரம் ஒருபுறம் இருந்தாலும், வெயிலால் பெண் மயங்கியதும், இளைஞர்கள் விபத்தில் சிக்கியதும் அங்கு நிலவிய சூழலில் சிறு சோகத்தை ஏற்படுத்தியது.
