ஈரோடு மாவட்டம் பாரதி நகர் 3-வது வீதியைச் சேர்ந்த 24 வயதான வினோதினி என்ற திருமணமான பெண்ணிற்கும், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த நவீன் என்கிற நவநீதகிருஷ்ணன் என்ற பட்டதாரி வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது தொடர்பு குறித்துத் தெரியவந்ததை அடுத்து, வினோதினிக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வினோதினியை அவரது கணவர் தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில், தாய் அளித்த புகாரைத் தொடர்ந்து தம்பதியினர் மீண்டும் இணைந்து வாழத் தொடங்கினர்.
இருப்பினும், நவீன் வினோதினியுடனான நெருக்கமான புகைப்படங்களைக் கணவருக்கு அனுப்பியதால் மீண்டும் குடும்பத்தில் முரண்பாடு வெடித்தது. இதனால் கணவரைப் பிரிந்த வினோதினி கடந்த ஓராண்டாகத் தாயார் வீட்டிலேயே வசிக்கத் தொடங்கினார். நாளடைவில் நவீனுடன் பேசுவதையும் குறைத்துக் கொண்டதால், ஆத்திரமடைந்த நவீன் ஜூலை 28 அன்று இரவு வினோதினியின் வீட்டிற்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தகராறு முற்றிய நிலையில், வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை வினோதினி மீது ஊற்றித் தீவைத்துவிட்டு நவீன் தப்பி ஓடியுள்ளார். குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டு வெளியே வந்த தாய், தீயில் எரிந்த நிலையில் இருந்த வினோதினியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உயிருக்குப் போராடிய வினோதினி, நவீனே இச்செயலைச் செய்ததாகவும், “என் மகனைப் பார்த்துக் கொள்ளுங்கள், என்னால் இனி வாழ முடியாது” என்றும் தாயிடம் கூறிவிட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தின் போது லேசான தீக்காயமடைந்த குற்றவாளி நவீன், கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள ஈரோடு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர், கரூருக்கு விரைந்து சென்று சிகிச்சையில் இருக்கும் நவீனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
