உடுமலை அருகே பாலப்பம்பட்டி பகுதியில், கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் பெண் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலப்பம்பட்டியைச் சேர்ந்த பானுமதி (45) என்பவருக்கும், ஆனைமலையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் இடையே விபத்து ஒன்றின் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பானுமதியின் மகளுக்குத் திருமணம் முடிந்த நிலையில், குடும்பத்தினரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பிரபாகரனுடனான தொடர்பை பானுமதி துண்டித்துள்ளார்.
தொடர்பைத் துண்டித்த பிறகும் பானுமதியைத் தொந்தரவு செய்ததால், அவர் அளித்த புகாரின் பேரில் பிரபாகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பிரபாகரன், பழனியில் கொத்தனார் வேலை பார்த்துக்கொண்டே மீண்டும் பானுமதியைச் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால், பானுமதி அவரது அழைப்புகளை ஏற்க மறுத்து விலகியே இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், பாலப்பம்பட்டியில் உள்ள பானுமதியின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று, தன் மீதான வழக்கை வாபஸ் வாங்குமாறும், பானுமதி பெயரில் புதிய ‘சிம் கார்டு’ வாங்கித் தருமாறும் வற்புறுத்தியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பிரபாகரன் அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து பானுமதியின் தலையில் சரமாரியாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தைத் தடுக்க முயன்ற மயில்சாமி என்பவரையும் பிரபாகரன் கல்லால் தாக்கியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த உடுமலைப் போலீசார் கொலையாளி பிரபாகரனைக் கைது செய்தனர். காயமடைந்த மயில்சாமி மற்றும் உயிரிழந்த பானுமதியின் உடல் ஆகியவை உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
