பதைபதைக்கும் மானாமதுரை…. பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் கொடூரக் கொலை… தூத்துக்குடியைத் தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி….!

By Nanthini on ஐப்பசி 30, 2026

Spread the love

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி மல்லிகா (56). வழக்கம்போல் வீட்டில் தனியாக இருந்த மல்லிகாவை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து அவரை கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

   

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மானாமதுரை காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட ஆய்வில், மல்லிகா அணிந்திருந்த 7 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் 1 சவரன் தங்கத் தோடு ஆகியவை மாயமாகியுள்ளது தெரியவந்தது. இதனால், கொள்ளை அடிக்கும் நோக்கிலேயே இந்தத் துணிச்சலான கொலை அரங்கேற்றப்பட்டிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

   

சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்த சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார். மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொலையாளிகள் விட்டுச் சென்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

 

நேற்று தூத்துக்குடியில் இதேபோன்று நகைக்காகப் பெண் ஒருவர் வீடு புகுந்து கொலை செய்யப்பட்ட நிலையில், இன்று சிவகங்கையிலும் அதே போன்றதொரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் எதிர்க்கட்சியினர் தீவிரக் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.