திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த இடையன்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் விஜய் (27). இவரது மனைவி ஷர்மிளா (25). ஐந்து வருடங்களுக்கு முன் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
விஜய் அடிக்கடி வெளியூர் செல்வதால், அக்கம்பக்கத்தினர் கூறிய தகவலின் பேரில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு விசாரித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, ஷர்மிளா தன் தாய் ராணிபாத்திமா வீட்டிற்குச் சென்றுவிடுவது வழக்கம்.
சம்பவத்தன்று இரவு, நடத்தை சந்தேகம் காரணமாக மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், விஜய் ஷர்மிளாவைத் தாக்கியுள்ளார். இதைக் கண்ட ராணிபாத்திமா, விஜய்யைக் கண்டித்துள்ளார். அப்போது, ஷர்மிளா தனது கள்ளக்காதலனுடன் ரீல்ஸ் எடுத்துப் பதிவிட்டதை விஜய் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த ஷர்மிளாவும், ராணிபாத்திமாவும் சேர்ந்து விஜய்யை உருட்டு கட்டையாலும், கம்பியாலும் சரமாரியாகத் தாக்கி கழுத்தில் கயிற்றால் இறுக்கிக் கொலை செய்துள்ளனர்.
கொலையை மறைப்பதற்காக, விஜய் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டது போல் சடலத்தை ஜன்னல் கம்பியில் கட்டி நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. விஜய்யின் உறவினர்களின் புகாரின் பேரில் விசாரணை நடத்திய சேத்துப்பட்டு போலீசார், மனைவி ஷர்மிளா மற்றும் அவரது தாய் ராணிபாத்திமா ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
