இன்ஸ்டாகிராம் மோகம்…. நம்பிப் போன பெண்ணுக்கு காத்திருந்த பேரிடி….. ரிசார்ட்டில் நடந்த ஷாக்கிங் உண்மை….!

By Nanthini on ஐப்பசி 18, 2026

Spread the love

இன்ஸ்டாகிராமில் ஆடம்பர வாழ்க்கையை வெளிப்படுத்தியும், ஏழைகளுக்கு உதவி செய்வது போன்ற வீடியோக்களைப் பதிவிட்டும் பிரபலமான நபர் மீது, திருமணமான பெண் ஒருவர் நகை பறிப்பு மற்றும் அந்தரங்கப் புகைப்படங்களைக் காட்டி மிரட்டியதாகப் புகார் அளித்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில் வளர்ச்சிக்கு உதவுவதாகக் கூறி அறிமுகமான அந்த நபர், பெண்ணை ஏமாற்றி 11 சவரன் தாலிச் செயினைப் பறித்துக்கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவர் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தீபக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னை ஒரு கட்டுமான நிறுவனக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட தீபக், அந்தப் பெண்ணின் தொழிலை விரிவுபடுத்த உதவுவதாக ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். அதனை நம்பிய பெண்ணை, தொழில் விஷயமாகப் பேச வேண்டும் எனக் கூறி சென்னைக்கு அழைத்துள்ளார்.

   

இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி நீலாங்கரையில் உள்ள தனியார் ரிசார்ட்டுக்குச் சென்ற அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல், அவரது அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தீபக் தனது செல்போனில் ரகசியமாகப் பதிவு செய்துள்ளார். பின்னர், நீச்சல் குளத்தில் குளிக்கச் செல்லலாம் என்று கூறி, தண்ணீரில் நகைகள் தொலைந்துவிடும் என்று நம்பவைத்து பெண்ணின் கழுத்தில் இருந்த 11 சவரன் தாலிச் செயினைக் கழற்றித் தருமாறு கேட்டு வாங்கியுள்ளார். அதன்பிறகு நகையைத் திருப்பிக் கேட்டபோது தீபக் முகத்தை மாற்றி, அந்தரங்கப் புகைப்படங்களைக் காட்டி மிரட்டியதுடன், அரசியல்வாதிகள் மற்றும் யூடியூபர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி அச்சுறுத்தியுள்ளார்.

   

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், வேறு வழியின்றி நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் தீபக் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனர். சமூக வலைதளப் பிரபலங்களின் பெயரால் இதுபோன்ற குற்றச் செயல்கள் அரங்கேறி வருவது பொதுமக்களிடையே பெரும் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது.