தாராபுரம் தொகுதியில் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சி சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட இடத்திலும், தடை உத்தரவை மீறி சாலை மறியல் மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், முதலமைச்சர் விஜயின் ரோடு ஷோ சென்ற பாதையில் அனுமதியின்றி பேனர் வைத்தது, அதனை அகற்ற முயன்ற காவல்துறையினரைத் தடுத்து நிறுத்தி பணி செய்யவிடாமல் தடுத்தது, தவெக தொண்டர் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறாகப் பதிவிட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் நாதகவினர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், கலவரம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் தாராபுரம் நாதக வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் முருகு சந்திரகுமார் மற்றும் விக்னேஷ் பாண்டியன், கந்தசாமி, கோவிந்தராஜ், சஞ்சய் காந்தி, இசை மதிவாணன், சூர்யா, ஷேக் பரித் ஆகிய 9 பேரை காவல்துறையினர் நேற்று (அக்டோபர் 20) அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்குப் பிறகு, நீதிபதி உமா மகேஸ்வரி முன்னிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இரு தரப்பு வாதங்களையும் விரிவாக விசாரித்த நீதிபதி, கார்த்திகா உள்ளிட்ட 9 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் போது செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகா, “நான் என்ன போதைப்பொருளா கடத்தினேன்? தேர்தலில் நின்றது ஒரு குற்றமா? எங்கள் மீது பிணையில் வெளியில் வர முடியாத பொய் வழக்குகள் பதிவு செய்துள்ளார்கள்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
