“எத்தனை காலத்திற்குத் தான் இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கும் ஓட்டு போடுவீங்க”…. மக்களிடம் சீமான் வைத்த உருக்கமான வேண்டுகோள்….!

By Nanthini on சித்திரை 13, 2026

Spread the love

ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், இப்பகுதியில் நிலவும் மேய்ச்சல் நில ஆக்கிரமிப்புகள் மற்றும் வனத்துறையினரின் கெடுபிடிகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும், ஆண்டிபட்டி தொகுதியில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பிகளே மாறி மாறிப் போட்டியிட்டு வெற்றி பெறுவதைக் கடுமையாகச் சாடிய அவர், இது ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்கும் செயல் என்று விமர்சித்தார். “வாக்குக்குக் காசு கொடுப்பதால் ஜனநாயகம் செத்து பணநாயகம் வென்றுள்ளது; இந்தப் பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிகு ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்” என அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய சீமான், இலவசங்களை நோக்கிச் சென்று மக்கள் தங்களது தன்மானத்தை இழக்க வேண்டாம் என்றும், தரமான போக்குவரத்து மற்றும் கட்டணச் சேவைகளைத் தான் வழங்குவதாகவும் உறுதியளித்தார். கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதைத் தடுத்து நிறுத்தியது தாங்கள் தான் எனக் குறிப்பிட்ட அவர், நிலம் மற்றும் வளம் சார்ந்த தொழிற்சாலைகளைத் தொடங்கி, நாட்டுக்கோழி மற்றும் ஆடு வளர்ப்பு மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதே தமது இலக்கு என்றார். “டாஸ்மாக் கலாச்சாரம் ஒழியவும், ஊழலற்ற ஆட்சியை நிலைநாட்டவும் இரட்டை இலை மற்றும் உதயசூரியன் சின்னங்களுக்கு மாற்றாக இந்த முறை விவசாயி சின்னத்திற்கு வாக்களித்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்” என அவர் பொதுமக்களிடம் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.