தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சி மூலமாக அரசியலில் இறங்கிய பிறகு திமுக மற்றும் அதிமுகவுக்கு மிகப்பெரிய போட்டியாக மாறியுள்ளது. விஜயின் வருகை ஆளும் கட்சியான திமுகவிற்கு பெரிய சிக்கலாகவே மாறியுள்ளது. அதேசமயம் திமுகவை தோற்கடிக்க அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் விஜயுடன் கூட்டணி அமைக்க தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் விஜய்யை முதல்வர் வேட்பாளராக இருக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என தமிழக வெற்றி கழகம் திட்டவட்டமாக கூறி வருகிறது. அதேசமயம் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் சமீபத்தில் விஜய் கட்சியில் இணைந்த பிறகு அதிமுகவிலிருந்து முக்கிய புள்ளிகள் பலரும் தொடர்ந்து விஜய் கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி முந்தி செல்கிறது. யார் யார் கூட்டணிக்கு வருவார்கள் என்று ஜாதகம் பார்த்து சொல்ல முடியாது. திமுகவை எதிர்ப்பவர்கள் அதிமுகவுடன் இணைவார்கள். சாமி யாருக்கு வரம் தரப்போகிறது என மக்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார். திமுகவை விஜய் தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில் விஜய் அதிமுக கூட்டணியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
