இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள்.
தான் அறிமுகமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்தன. அதன் பின்னர் ரஹ்மான் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் வைரல் ஹிட்டாகின. பாடல்களுக்காகவே சில பாடல்கள் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோர்தான் அந்த காலத்தில் ரஹ்மானின் பாடல்களை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றால் அது மிகையாது. அதன் பின்னர் இந்தி சினிமா, ஹாலிவுட் மற்றும் உலக சினிமா என அடுத்தடுத்து அவரின் வளர்ச்சி உயர்ந்து கொண்டே சென்றது.

தனிப்பட்ட வாழ்க்கையிலும் சினிமா வாழ்க்கையிலும் அப்பழுக்கற்றவராக இருந்த ரஹ்மானுக்கு சமீபத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவரின் மனைவி ரஹ்மானை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். அதை ரஹ்மானும் உறுதிப்படுத்தியுள்ளார். இதையொட்டி ரஹ்மான் மீது சில அவதூறுகள் பரப்பப்பட்டன. அந்த குற்றச்சாட்டுகளை சாய்ரா பானுவே மறுத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட பிரச்சனை காரணமாக ஒரு குறிப்பிட்ட காலம் சினிமாவில் இருந்து அவர் சிறு இடைவெளி எடுத்துக் கொள்ள விரும்புவதாக சொல்லப்படுகிறது. அதன் காரணமாகதான் அவர் தற்போது சூர்யா 45 படத்தில் இருந்தும் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவலை அடிப்படை ஆதாரமற்றது என ரஹ்மானின் மகள் கதீஜா மறுத்துள்ளார்.
