தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது தேர்தல் களம் புதிய வேகத்தை எட்டியுள்ளது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ள போதிலும் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஆளும் கட்சியில் நிலவும் உட்கட்சி பிரச்சனையும் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதான ஊழல் புகாரும் தான். இந்த முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று பல முயற்சிகளை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் அமைச்சர்கள் மீதான புகார் அடுத்தடுத்து மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் தங்களை நிரூபிக்க அமைச்சர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
இவ்வாறு திமுகவின் உள்ளகத்தில் சச்சரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் தற்போது திமுக கூட்டணியில் பல வருடங்களாக பயணித்து வரும் மதிமுக 2026 சட்டமன்ற தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிட விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய மதிமுகவின் முதன்மைச் செயலாளரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கான அங்கீகாரம் வேண்டுமென்ற தலைமையிடம் கேட்டுள்ளோம்.
எல்லா இயக்கங்களுக்கும் தனிப்பட்ட முறையில் சின்னம் உள்ளது. அதில் போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து. இது தொடர்பாக எங்கள் தலைமையும் திமுக தலைமையும் கலந்து ஆலோசித்து முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த கருத்து திமுக கூட்டணியில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றால் அது திமுகவின் வெற்றியாகவே கருதப்படும். இதனை மதிமுக விரும்பவில்லை என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகின்றது. தற்போது இது புதிய பரபரப்பு கிளப்பியுள்ளது.
